12/09/2024
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்த தொன்மதுரைக்காட்சிகள்..
மதுரை யானைக்கல்லின் மற்றுமொரு தொன்மைக் காட்சி..
யானைக்கல்,
அன்றைய தொன்மதுரையின், வடக்கு நுழைவு வாயில்.. வடக்கிலிருந்து மதுரைக்குள் நுழைவோரை வரவேற்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது..
தொன் மதுரையின், கோட்டையும், அகழிகளும், 1850களில், அகற்றப்பட்டு, சமப்படுத்தப்பட்டு, மாரட் வீதிகளும், வெளிவீதிகளும் உருவாக்கப்பட்ட பின்னர்.. மதுரையின் வடக்குக் கோட்டை நுழைவு வாயில் அமைந்திருந்த பகுதியில், கோட்டை அகற்றப்பட்டதன் நினைவாக, அப்போதைய மதுரையின் கலெக்டர், திரு. பிளாக்பர்ன், அவர்களால் நிறுவப்பட்டது..
சிதிலமடைந்து கிடந்த மஹால் ரங்க விலாசம் பகுதியில், இருந்த யானை சிலை இங்கு கொண்டு வந்து நிறுவப்பட்டது..
1870-களில், மதுரை நகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின், மதுரை மக்களின், குடிநீர் தேவைக்காக, யானைக்கல்லின் பின்புறத்தில், மிகப்பெரிய மேல்நிலை நீர்த்தேக்கம், அமைக்கப் பட்டிருக்கின்றது..
மின்சார வசதிகள் இல்லாத அந்தக் கால கட்டத்தில், நீராவி இயந்திரங்களைக் கொண்டு, வைகையாற்றிலிருந்து, தண்ணீர், ஏற்றப்பட்டிருக்கலாம்.
இந்த புகைப்படம், 1920களில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம்.. "தென்னிந்தியாவில் ஒரு நகரக்காட்சியும்-நந்தி சிலையும்" என்ற தலைப்பில், காணக்கிடைத்தது.. புகைப்படக்கரரின் பெயரோ, வேறு குறிப்புகளோ இல்லை.. தொன் மதுரையின் புகழ் வாழ்க..! இணையத்தில் இதை பதிவு செய்தவர்களுக்கும், இந்த அற்புத புகைப்படத்தை எடுத்த அந்த புகைப்பட கலைஞனுக்கும், நமது மனமார்ந்த நன்றிகளும், வந்தனங்களும்..