12/08/2026
நாம் மாறாவிட்டால்…
நான் இன்று எழுதப்போகும் விடயம் சிலருக்கு கடுமையாகத் தோன்றலாம். ஆனால் இதைச் சொல்லாமல் இருக்க என்னால் முடியவில்லை. எமது சமூகத்தின் மீது ஏதோ ஒரு பேரழிவு வரப்போகிறது என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. அதை நான் ஆழமாக உணர்கிறேன். அது எப்போது, எப்படி வரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் விரைவில், பெரிதளவில் ஏதோ நடக்கப் போகிறது என்ற ஓர் உணர்வு என்னை வேதனைப்படுத்தியபடியே உள்ளது.
சமீபத்திய சில நிகழ்வுகளைப் பாருங்கள். பொது நிகழ்ச்சிகள் குழப்பத்தில் முடிவது, பொருட்கள் சேதப்படுத்தப்படுவது, உணவுத் திருவிழாக்களில் ஏற்படும் அநாகரிகமான சண்டைகள், சமூக ஊடகங்களில் ஒரு கருத்துக்காக ஒருவர் மற்றவரை இழிவுபடுத்துவது, குடும்பத்தினரையே இழுத்து வந்து கேவலமாகப் பேசுவது—இவை தனித்தனி சம்பவங்கள் அல்ல. எமது சமூகத்தின் உள்ளே வளர்ந்து வரும் ஒரு மனநிலையின் அறிகுறிகள். நாம் இப்படியே தொடர்ந்தால், இயற்கையின் கோபத்திலிருந்து தப்ப முடியாது என்று நான் அஞ்சுகிறேன்.
இன்று Facebook-ஐத் திறந்தால் போதும். கருத்து வேறுபாடு என்றால் உடனே வாய்மொழித் துன்புறுத்தல். கோபம் என்றால் குடும்பத்தை இழுத்து வருதல். எதிர்ப்பு என்றால் ஆபாசமான வார்த்தைகள். அவற்றை எமது குழந்தைகளும் படிக்கிறார்கள் என்பதைப் பற்றிய கவலையே பலருக்கு இல்லை. குழந்தைகளிடம் மரியாதையைப் போதிக்கிறோம்; ஆனால் அவர்களுக்கு முன்னால் மரியாதையற்றவர்களாக நடக்கிறோம். இதுதான் பாசாங்குத்தனம்.
இன்றைய சமூகத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்று பாசாங்குத்தனம்.
தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் நாம் தவறு செய்திருக்கிறோம் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதே மிகப்பெரிய பிரச்சினை. எமக்குப் பிடித்த மனிதன் செய்தால் சரி; பிடிக்காதவன் செய்தால் தவறு. எமக்கு நன்மை கிடைத்தால் எது நடந்தாலும் சரி; எமக்கு எதிராக வந்தால் நடந்தவை அனைத்தும் தவறு. எமக்கென்று ஒரு அளவுகோல்; மற்றவர்களுக்கென்று இன்னொரு அளவுகோல்.
நாங்கள் எங்களையும், எமது பிள்ளைகளாகிய நாளைய தலைமுறையையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறோம்.
ஒருவர் கல்வியில் பின்தங்கியிருக்கலாம். அதில் அவமானம் இல்லை. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாததுதான் பிரச்சினை. ஒருவர் தவறு செய்திருக்கலாம். அதுவும் மனித இயல்பு. ஆனால் சுட்டிக்காட்டப்பட்டதும் தவறை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, சுட்டிக்காட்டியவரையே தாக்குவது தான் பிரச்சினை.
தன்னைத் தானே நேர்மையாகப் பார்க்கும் துணிவு, நான் உட்பட எம்மவர்களிடம் குறைந்து வருகிறது. எமது சமூகத்தின் சீரழிவுக்கு இதுவே முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.
எம்முடன் நாம் நேர்மையாக இருக்க வேண்டும்.
91 மதிப்பெண் எடுத்த குழந்தையிடம், "அருமை!" என்று சொல்லாமல், இன்னொரு குழந்தை 92 எடுத்திருக்கிறது என்று ஒப்பிட்டு அதனை வருத்தப்படச் செய்கிறோம். இதன் மூலம் இரண்டாவது இடம் தோல்வி என்றும், மற்றொருவருடைய வெற்றி எமது தோல்வி என்றும் கற்றுக்கொடுக்கிறோம். பின்னர் சமூகத்தில் ஏன் பொறாமை அதிகமாகிறது என்று ஆச்சரியப்படுகிறோம். இது கூட ஒரு வகையான பாசாங்குத்தனமே.
நில அபகரிப்பு, அலுவலக நேரத்தை முறையாகப் பயன்படுத்தாதது, கைபேசியில் மூழ்கிக் கிடப்பது, குழந்தைகளை கவனிக்காமல் இருப்பது, கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் இருப்பது, வங்கிகளையும் தனிநபர்களையும் ஏமாற்றுவது, போதைப்பொருள், சிறிய அளவிலான மோசடிகளை "பரவாயில்லை" என்று கடந்து செல்வது—இவை அனைத்தும் ஒரே நாளில் ஒரு சமூகத்தை அழிக்காது. ஆனால் இவை சேர்ந்து அந்த சமூகத்தின் மனசாட்சியை மெதுவாகக் கொன்று விடும்.
அதே நேரத்தில், எம்மிடம் நம்பிக்கை தரும் மனிதர்களும் இருக்கிறார்கள். எனது சொந்த அனுபவத்தில், சில வாடிக்கையாளர்கள் தவறுதலாக அதிகமாகக் கிடைத்த பணத்தையே திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். அது எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும், இன்னும் நம்பிக்கை வைக்கலாம் என்ற உணர்வையும் தருகிறது. நேர்மையானவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அதிகமானவர்கள் அல்ல. ஆனால் இருக்கிறார்கள்!
நானும் இந்த சமூகத்தின் ஒரு பகுதிதான். எனவே, மற்றவர்களை மட்டும் குற்றம் சாட்டி நான் இந்தப் பதிவை எழுதவில்லை. நானும் சரியானவன் அல்ல. நானும் தவறுகள் செய்கிறேன். நானும் சில நேரங்களில் பிறரைப் விளங்கிக்கொள்ளாமல் நடந்திருக்கிறேன். நானும் இந்த சமூகத்தின் குறைகளுக்கு ஒரு சிறிய காரணமாக இருக்கிறேன். அதனால்தான் இந்த எச்சரிக்கை முதலில் எனக்கே.
நான் என்னை மாற்ற முயற்சி செய்கிறேன். இன்னும் நிறைய மாற்ற வேண்டியுள்ளது. நான் பரிபூரணமானவன் அல்ல; எம்மில் எவரும் பரிபூரணமானவர்கள் அல்ல. ஆனால் எமது தவறுகளை ஒப்புக்கொண்டு, அவற்றிலிருந்து மாற முயற்சி செய்ய வேண்டும். தவறு செய்வது தவறல்ல; தவறை ஏற்றுக்கொள்ள மறுப்பதே மிகப் பெரிய தவறு.
ஒரு காலத்தில் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழ முடியாத காலம் இருந்தது. அயல்வீட்டுக் குழந்தையை எமது குழந்தையாகப் பார்த்தோம். ஒருவருடைய துன்பம் மற்றவருடைய துன்பமாக இருந்தது. இன்று எமது வீட்டு வாசலைத் தாண்டி மற்றவரைப் பற்றிச் சிந்திக்கவே பல நேரங்களில் நாம் விரும்புவதில்லை.
நாம் மீண்டும் மனிதர்களாக ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும்.
இன்னொருவரின் வெற்றியை எமது தோல்வியாகப் பார்க்காமல், அது எமது சமூகத்தின் வெற்றியாகப் பார்க்க வேண்டும். இன்னொருவர் உயரும்போது எமக்கும் பெருமையாக இருக்க வேண்டும். அவரை கீழே இழுத்து எம்மை உயர்த்த முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்.
அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லியும் பயனில்லை. அவர்கள் முன்வைக்கும் ஒவ்வொரு கருத்திலும் நாங்கள் பிரிகிறோம். சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளைப் பற்றிய பதிவுகளைப் பாருங்கள்—கருத்து வேறுபாடு எவ்வளவு விரைவாக வெறுப்பாக மாறுகிறது என்பதைப் விளங்கிக்கொள்ளலாம். அரசியலும் எமது சமூகத்தின் கண்ணாடிதான். அந்தக் கண்ணாடியில் தெரியும் முகம் எம்முடையதே.
இப்போது நான் மிகவும் பயப்படுவது இதற்காகத்தான்.
ஒரு சமூகமாக நாம் எம்மைத் திருத்திக்கொள்ள மறுத்தால், ஏதாவது ஒன்று எம்மைத் திருத்தும். அது இயற்கையாக இருக்கலாம். பொருளாதாரமாக இருக்கலாம். சமூகமாக இருக்கலாம். நாம் இப்போது கற்பனை செய்ய முடியாத வேறு வடிவமாக இருக்கலாம்.
அப்போது நல்லவர்களும் பாதிக்கப்படலாம். நேர்மையானவர்களும் விலையைச் செலுத்த வேண்டியிருக்கலாம். ஏனென்றால் இயற்கை ஒரு போதும் யார் தவறு செய்தார்கள், யார் செய்யவில்லை என்று பிரித்து பார்க்காது. அனைவருக்கும் ஒரே தீர்ப்பே!
அதனால்தான் நான் பயப்படுகிறேன். நானும் வரப்போகின்ற அந்தத் தீர்ப்பிற்கு ஒரு காரணமானவன். நீங்களும் நானும் சேர்ந்து உருவாக்கிய சமூகமே இது. எனவே நானும் மாற வேண்டும். நீங்களும் மாற வேண்டும். நாமெல்லோரும் மாற வேண்டும்.
நேரம் அவ்வளவாக இல்லை!
எமது தவறுகளை ஒப்புக்கொள்வோம். எமது பாசாங்குத்தனத்தை விட்டுவிடுவோம். குழந்தைகளிடம் எதிர்பார்க்கும் நல்ல குணங்களை முதலில் நாமே கடைப்பிடிப்போம். பிறருடைய வெற்றியைப் பார்த்து மகிழக் கற்றுக்கொள்வோம். கோபப்பட்டாலும் மனிதத்தன்மையை இழக்காமல் இருப்போம்.
பேரழிவு வந்து எம்மை மண்டியிடச் செய்து மாற்றுவதற்கு முன்னர், நாமே எம்மை மாற்றிக்கொள்வோம்.
நான் சொல்வது தவறாக இருக்க வேண்டும் என்று உண்மையாகவே விரும்புகிறேன்.
ஆனால் அந்தப் பேரழிவு வரப்போகிறது என்ற அச்சம்…
எனக்குள் அதிகரித்தவண்ணமே இருக்கிறது...